India

"சாப்பாடு நல்லா இல்ல.." - கோபத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக ஊழியர்.. ஒடிசாவில் பயங்கரம் !

உணவு நல்லா இல்லை என்று கூறியதால் ஆத்திரப்பட்ட ஹோட்டல் உரிமையாளர், உணவருந்த வந்தவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை அடுத்துள்ள பாலிச்சந்திரபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்ஜித் பரிதா (வயது 48). அந்த பகுதியில் கூலி தொழில் செய்து வரும் இவர், அவ்வப்போது வெளியில் தான் உண்பார். அப்படி சம்பவத்தன்றும் வெளியில் ஒரு உணவு கடையில் உணவருந்தியுள்ளார்.

சாப்பிட்டு முடித்து விட்டு, ஹோட்டல் உரிமையாளரான பிரவாகர் சாஹூ என்பவரிடம் உணவு குறித்து குற்றம்சாட்டினார். உணவு சரியில்லை என்றும், விலைக்கேற்ற தரமான ருசியான உணவு வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஹோட்டல் உரிமையாளர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாதத்தில் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து தன்னிடம் சண்டையிட்டவர் மீது ஊற்றியுள்ளார்.

சூடான எண்ணெய் மேலே பட்டதும் துடிதுடித்த பிரசன்ஜித் பரிதா, அலறி துடித்துள்ளார். இதில் அவரது முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியான ஹோட்டல் உரிமையாளர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வாக்குவாதத்தில் ஆத்திரப்பட்ட ஹோட்டல் உரிமையாளர், உணவருந்த வந்தவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ள சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சக்திமான்: “இந்து இயக்குநர் தான் வேண்டும்..” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சக்திமான் முகேஷ் கண்ணா!