India

“கணவரும், வளர்ப்பு மகனும்.. என்னை கருணைக்கொலை செய்யுங்கள்” : குடியரசுத் தலைவருக்கு பெண் உருக்கமான கடிதம்!

தனது இரண்டாவது கணவரும், வளர்ப்பு மகனும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதால், தன்னை கருணைக்கொலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு பெண் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுமிக்க பெண் ஒருவர். இவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

draupadi murmu

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எனது கணவரை விவாகரத்து செய்து, சண்டிகரைச் சேர்ந்த 55 வயது விவசாயி ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது வீட்டிற்கு வாழ சென்றேன். திருமணம் முடிந்து சில நாட்கள் பிறகு, அவரது மகன் என்னிடம் தகாத உறவு வைக்க முற்பட்டான்.

அதற்கு நான் இணங்கமாட்டேன் என்றதும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பகிரங்கமாக மிரட்டினான். பிறகு தொடர்ந்து என்னை மிரட்டி வன்கொடுமை செய்தான். இதனால் நான் கர்ப்பமானேன். பின்னர் அதனையும் கலைக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினர்.

தொடர்ந்து நடந்த கொடுமைகளில், ஜூலை 18-ம் தேதி எனது கணவர் என்னை, சண்டிகரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரது நண்பர், உறவினர் மற்றும் அவரது சக ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் வேறு வழியின்றி காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த 9-ம் தேதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. நான் இப்போது எனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறேன். இந்த கொடுமையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நீதியின் மீதான நம்பிக்கையும் போய்விட்டது. எனவே என்னை கருணை கொலை செய்திட தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவருக்கு பாதிக்கப்பட்ட பெண் இப்படி ஒரு கடிதம் எழுதியுள்ளது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த சம்பவம் ஆளும் பாஜக மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வலுத்த கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸ் எஸ்.பி தினேஷ் குமார் பிரபு கூறுகையில், "வழக்கு குறித்து நியாயமான முறையில் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும்" என்றார்.

Also Read: செவிலியரை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 4 பேர் கொடூர செயல்-சத்தீஸ்கரில் அதிர்ச்சி