India

பில்கிஸ் பானு வழக்கு.. பரோலில் வந்தபோது பெண்ணிடம் தவறாக நடந்த குற்றவாளி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்க மத ஆணையமும் "2002 குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து. இது மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் தண்டனை விதிக்கும் முறையின் ஒரு பகுதியாகும்" என கண்டனம் தெரிவித்திருந்தது.

சமீபத்தில் கூட குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒருவரான மிதேஷ் சிமன்லால் என்பவர் பரோலில் இருந்து வெளியே வந்தபோதுபெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்தபோது இவ்வாறு நடந்துகொண்டதாக தஹோத் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குஜராத் அரசி பிரமாண பத்திரத்தின் மூலம் தற்போது வெளிச்சதுக்கு வந்துள்ளது.

Also Read: ம.பி :பழங்குடி சிறுவனை கயிறு கட்டி கிணற்றில் தொங்கவிட்ட கும்பல்.. வீடியோ எடுத்த சிறுவனை மிரட்டிய போலிஸ்!