India
ஊழல் வழக்கில் சிக்கிய எடியூரப்பா மற்றும் குடும்பம்.. லோக் ஆயுக்தா வழக்கு பதிவு: விரைவில் கைது?
கர்நாடகாவில் கடந்த 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை எடியூராப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை.
இதனை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆபிரகாம் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எடியூரப்பா மீது பெங்களூரு லோக் அயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த் உள்ளிட்டோர் மீதும் பெங்களூரு லோக் ஆயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, எடியூரப்பா, விஜயேந்திரா, கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு லோக் ஆயுக்தா போலிஸார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் ஊழல் தடுப்புப் படை மூடப்பட்டு, லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, எடியூராப்பா குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கில், எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி குடும்பத்தினரும் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஊழல் வழக்கில், எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 24 கோடி ரூபாய் வரை லஞ்ச பேரம் பேசிய ஆடியோ வெளியானதால் ஒப்பந்ததாரரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடகா லோக் ஆயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 666 கோடி ரூபாய் ஒப்பந்தம் பெறுவதற்கு சந்திரகாந்த் ராமலிங்கம் முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!