India

உயிரிழந்த மகன்.. உயிர் வரவைக்க Whatsapp செய்தியை நம்பி பெற்றோர் செய்த காரியம் : கர்நாடகாவில் அதிர்ச்சி !

கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்கிருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து பதற்றத்துடன் வந்த சிறுவனின் குடும்பத்தார் அவரது உடலை மீட்டு கதறி அழுத்துள்ளனர்.

அப்போது அவர்கள் திடீரென்று 10 கிலோ உப்பை கொண்டுவருமாறு சக உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அவர் என்ன ஏது என்று கேட்டபோது எதுவும் கூறாமல் எடுத்து வரும்படி கூறியுள்ளனர் சிறுவனின் பெற்றோர். அவர்களும் 10 கிலோ உப்பை கொண்டுவந்தனர். அதை வாங்கிய பெற்றோர் உப்பை கீழே கொட்டி அதன்மேல் சிறுவனை படுக்க வைத்து, பின்னர் மீதி உப்பையும் சிறுவன் மேல் கொட்டியுள்ளனர்.

பின்னர் இது குறித்து சக உறவினரிடம் இறந்தவர் உடலை இது போன்று செய்தால் மீண்டும் உயிர் கிடைக்கும் என்று வாட்சப்பில் செய்தி வந்ததாக கூறினர். பின்னர் அவர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்தனர். இருப்பினும் சிறுவன் உயிர் பெறவில்லை.

இதனிடையே கிராம மக்கள் காவல்துறைக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அவர்கள் சிறுவனை மீட்டு சோதனை செய்தனர். அப்போது சிறுவனுக்கு உயிரில்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் மிகவும் மனமுடைந்த பெற்றோர் சிறுவனை கட்டியணைத்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் உடல் இறுதி சடங்குடன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மகன் உயிர்பிழைப்பான் என்ற நம்பிக்கையில் மூட நம்பிக்கையை பின்பற்றிய பெற்றோரின் செயல் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Also Read: ம.பி - 3 நாள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை.. புகார் அளிக்க சென்ற சிறுமியை கொடூரமான தாக்கிய போலிஸ் !