India

1 வயது குழந்தையை கவ்விய புலி.. கடுமையாக போராடி காப்பாற்றிய இளம் சிங்கப்பெண்.. ம.பி-யில் பதைபதை சம்பவம் !

மத்திய பிரதேச மாநிலம் உமரியா பகுதியை அடுத்துள்ள ரொஹானிய கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா செளத்ரி. இவர் நேற்று அந்த பகுதியிலுள்ள 'பந்த்வர்க் புலிகள் காப்பகத்திற்கு' அருகே தனது 1 வயது ஆண் குழந்தையுடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதிக்கு வந்த புலி ஒன்று குழந்தையை கவ்வியிருக்கிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அர்ச்சனா, உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். மேலும் புலியிடமிருந்து குழந்தையை காப்பாற்றவும் முயன்றுள்ளார். தாயின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த ஊர் மக்கள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். பிறகு புலியிடமிருந்து குழந்தையை மீட்க தாய்க்கு உதவி செய்தனர்.

ஆட்கள் சேர்ந்ததை கண்டதும் பயந்துபோன புலி, குழந்தையை போட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டது. பின்னர் கீழே கிடந்த குழந்தையை தாய் ஓடி போய் தூக்கினார். புலியிடமிருந்து குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தாய்க்கு இடுப்பு, கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடும் காயம் ஏற்பட்டது. மேலும் குழந்தைக்கும் தலையில் அடிபட்டிருந்தது.

இதையடுத்து தாய் மற்றும் குழந்தையை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறை காப்பாளர் தப்பியோடிய புலி குடியிருப்பு பகுதி அருகே உலாவுகிறதா என்பதை கண்காணித்து வருவதாக கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: நவீன நீரோ.. நகரமே வெள்ளத்தில் மிதந்தநிலையில் ஜாலியாக ஊர் சுற்றிய பெங்களூரு பாஜக MP ! கொந்தளிக்கும் மக்கள்