India

இனி ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% GST.. ஒன்றிய அரசின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்து சேவையாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. மேலும் பல மாநிலங்களுக்கு இடையே பொதுமக்கள் வந்து செல்வதற்கு ரயில் சேவையைதான் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 5 % ஜி.எஸ். வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்கு ரத்து செய்தால் அதற்கு ஏற்ப கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். 12 மணி நேரத்திற்குப் பிறகு ரத்து செய்தால் 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இந்நிலையில்தான் இந்த பிடித்தம் செய்யப்படும் கட்டணத்துடன் சேர்த்து 5% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.

அதேநேரம், பிற பொது பெட்டிகளுக்கு ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படாது. வழக்கமான ரத்து செய்ததற்கான கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்ததை போல் ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இறந்து போன வளர்ப்பு மகன் சடலத்துடன் வீட்டிலேயே தங்கி இருந்த 82 வயது முதியவர்.. உருக்கும் பாசப்போராட்டம் !