India

ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்ததால் மிரட்டல்..பாஜக அமைச்சரை கண்டித்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி!

கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்த் சிங். இவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக பொல்லப்பா என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் மீது புகார் அளித்த போலப்பா தனது குடும்பத்தினர் 8 பேரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வெளியே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்கள் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தற்கொலை செய்யவிடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து கூறிய போலப்பா , " அமைச்சர் செய்த ஆக்கிரமைப்பு தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு ஆவணங்களுடன் போலீசில் புகார் அளித்தேன். சமீபத்தில், நகராட்சி கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். புகார் அளித்த பின்னர் கடந்த ஒரு வருடமாக எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன., அமைச்சர் அனுப்பிய 35 முதல் 40 குண்டர்கள் எனது வீட்டிற்குச் சென்று எனது குடும்பத்தினரை அச்சுறுத்தினர்" என்று கூறினார்.

போலப்பா அளித்த புகாரின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் மற்றும் 3 பேர் மீது, ஹோஸ்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்சி/எஸ்டி சட்டம் 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 1 வயதில் பிரிந்த மகன்.. 25 ஆண்டுக்கு பின்னர் சந்தித்த தாய்.. கேரளா to குஜராத் பாசப்பிணைப்பு!