India

"தனது நண்பர் அதானிக்காக விவசாயிகளை வஞ்சிக்கிறார் " - மோடியை காட்டமாக விமர்சித்த மேகாலயா ஆளுநர் !

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது.

தொடர் போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசு பணிந்து வேளாண் சட்டதை திரும்பப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தவேண்டும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று முதலே டெல்லியில் குவிந்த விவசாயிகள் இன்று ஜந்தர் மந்தரில் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க ஹரியானா,உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற இடங்களில் இருந்து பெருமளவில் விவசாயிகள் வருகை தந்துள்ளனர்.

இதனிடையே மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், ஹரியானா மாநிலம் நூவி என்ற கிராமத்தில் நடைபெற்ற பசுக்கள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், " விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP)அமல்படுத்தப்படாவிட்டால் மற்றொரு போராட்டம் நடக்கும், இந்த முறை அது கடுமையான போராட்டமாக இருக்கும். இந்த நாட்டின் விவசாயியை உங்களால் தோற்கடிக்க முடியாது. உங்களால் அவரை பயமுறுத்த முடியாது. விவசாயிகள் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை உங்களால் அனுப்ப முடியாது என்பதால், விவசாயியை எப்படி பயமுறுத்துவீர்கள்?

பிரதமருக்கு அதானி என்ற நண்பர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளதால், MSP செயல்படுத்தப்படவில்லை. பானிபட்டில், அதானி நிறுவனம் பெரிய கிடங்கு கட்டி, குறைந்த விலையில் கோதுமையைக் குவித்து வைத்துள்ளது.பணவீக்கம் இருக்கும்போது, ​​அவர் அந்த கோதுமையை விற்பார்.அதனால் பிரதமரின் நண்பர்கள் லாபம் சம்பாதிப்பார்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Also Read: "பீகாரி கட்டும் வரி ரூ.2,000, அதே தமிழன் கட்டும் வரி ரூ.13,000 "-வைரலாகும் பொருளாதார நிபுணரின் ட்வீட்!