India

"உ.பி, குஜராத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயரத்தில் இருக்கிறது" - FREEBIES சர்ச்சைக்கு ஜெயரஞ்சன் பதிலடி!

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "நிதி ஆயோக் வெளியிட்ட கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர் எண்ணிக்கை 4 % மட்டுமே. இலவசம் கொடுக்க வேண்டாம் என சொல்லும் பா.ஜ.க கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 %. பா.ஜ.க ஆளும் குஜராத்தில் அது 17 %.

அரசியலமைப்பு சட்டத்தில் அரசின் கடமைகள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறும்போது மக்களிடம் எதுவெல்லாம் இல்லையோ அதை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார். அப்படி இருக்கையில், இதை தவறு என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் இலவசத்தால் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்று சொல்ல எந்த சான்றும் இல்லை. நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி கட்டிடங்கள், சாலை, பாலங்கள் அமைக்க சொல்கிறார்கள். இவற்றை பிறகு தனியாருக்கு விற்பதுதான் நல்ல வழியில் செய்யும் செலவா?

ஜூலை மாதத்தில் தமிழ்நாடு ரூ.8,500 கோடி GST செலுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் ரூ.7,000 கோடி செலுத்தியுள்ளது. இதில் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் சராசரியாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மாதம் ரூ.1,500 GST செலுத்துகிறார். உத்தரபிரதேசத்தில் இருப்பவர் ரூ.318 செலுத்துகிறார். இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தைவிட தமிழ்நாட்டை சேர்ந்த நபர் மாதம் ஒன்றுக்கு 5 மடங்கு அதிகமாக GST செலுத்துகிறார்" என்று கூறினார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: "மண்டையில் இருக்கும் கொண்டையை மறையுங்கள் மோடி.." -பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா ?