India

எழுத்து பிழை: 2 வருடமாக சிறையில் வாடும் நைஜிரீயர்.. ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மராட்டிய அரசுக்கு உத்தரவு!

மகாராஷ்டிர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் சோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை மேற்கொண்டபோது. நைஜீரிய இளைஞர் ஒருவரிடமிருந்து 116.19 கிராம் எடையுள்ள பவுடர், 4.41 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள், 40.73 கிராம் எடையுள்ள குங்குமப்பூ நிற இதய வடிவ மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தடயவியல் ஆய்வகத்தின் உதவி இயக்குனரின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், "நைஜீரியரிடம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் போதைப்பொருள்களோ, கோகைனோ, அல்லது எக்ஸ்டசியோ அல்ல. அவை லிடோகைன், டேபென்டாடோல் மற்றும் காஃபின் ஆகும். இந்த லிடோகைன் மற்றும் டேபென்டாடோல் ஆகியவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (Narcotic Drugs and Psychotropic Substances Act - NDPS) கீழ் வரும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு தற்போதும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு தடயவியல் இயக்குநர் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது நைஜீரியரிடம் பறிமுதல் செயற்பட்ட பொருட்களை NDPS சட்டத்தின் கீழ் வராது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், நைஜீரியரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் போதைப்பொருள் அல்ல என்றும், எனவே அவர் ஜாமீனுக்கு தகுதியானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்திய சட்டங்கள் வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என்றும், எனவே 6 வாரங்களுக்குள் அவருக்கு இழப்பீடாக 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால் இழப்பீடு வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். அதை நீதிபதி ஏற்க மறுத்தததால், தொலைபேசி மூலம் தலைமைச் செயலாளரிடம் பேசினார் வழக்கறிஞர். ஆனால் தலைமைச் செயலாளரோ "ஆய்வக அதிகாரிக்கு எதிராக அரசு விசாரணையைத் தொடங்கும். ஆனால் இழப்பீடு வழங்குவதற்கான கொள்கை தற்போது அரசிடம் இல்லை" என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகளோ, "கொள்கை இல்லாத காரணத்தால் தவறு செய்யாத மக்களை சிறையில் அடைத்து இழப்பீடு வழங்காமல் இருக்க முடியுமா?. இளைஞருக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை அரசு வழங்கவில்லை என்றால், பிழை செய்த ஆய்வக அதிகாரியிடன் இருந்து பெற்றுக் கொள்ளலாம்" என்று உத்தரவிட்டனர்.

Also Read: Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !