India

டிராக்டரை நிறுத்த அதன் சக்கரம் முன் தனது கைக்குழந்தையை வீசிய கொடூர தாய்.. இணையவாசிகள் கடும் கண்டனம் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக விவசாய நிலம் பற்றிய பிரச்சனை நீடித்து வருகிறது. குறிப்பிட்ட இடத்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தஹில் ஒரு சகோதரர் விவசாயம் செய்ய பிரச்சனைக்குரிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழ தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் மற்றொரு சகோதரருக்கு தெரியவந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடனே அந்த இடத்துக்கு வந்துள்ளனர்.

வந்தவர்கள் டிராக்டரை நிற்க கூறிய நிலையில், டிராக்டர் நில்லாமல் தொடர்ந்து வந்துள்ளது. அப்போது அதில் ஒரு சகோதரரின் மனைவி தனது கையில் இருந்த குழந்தையை நிற்காமல் வந்துகொண்டிருந்த டிராக்டரின் சக்கரம் முன்னால் வீசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டிராக்டரை ஓட்டிய மற்றொரு ஓட்டுநர் உடனடியாக டிராக்டரை நிறுத்தியுள்ளார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் குழந்தையின் தாய் குழந்தையை தூக்கி மீண்டும் சண்டையிட ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னர் இது இணையதளத்தில் பரவிய நிலையில், பலரும் அந்த தாயை விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய கோண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர்,இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் நிச்சயம் தவறு செய்தவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

Also Read: ரூ.25 லட்சம், 15 பவுன் மோசடி.. தொழிலதிபரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கைவரிசை !