India

ரூ. 3,419 கோடிக்கு மின்கட்டணம்.. பார்த்ததும் மயக்கமடைந்த வீட்டின் உரிமையாளர்.. ம.பி.யில் அதிர்ச்சி!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் நகரில் உள்ள ஷிவ் விஹார் காலனியை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் வழக்கம் போல தனது வீட்டின் மின் கட்டணம் குறித்து பார்த்தபோது அது 3,419 கோடி என காட்டியுள்ளது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் பிரியாங்கா குப்தாவின் மாமனார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரியங்கா குப்தா தன் கணவர் சஞ்சீவ் கன்கனேவை மின்கட்டண தொகை அதிகரிப்பு குறித்து விசாரிக்க மின்சார அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கு அவர் விசாரித்தபோது, கட்டண குழப்பத்தால் இந்த தவறு நேர்ந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் உள்ளூர் செய்திகளில் வெளியான நிலையில், இது குறித்து மத்தியப் பிரதேச மின்சாரத்துறை விளக்கமளித்துள்ளது. அதில், மனித தவறு காரணமாக இந்த குளறுபடி ஏற்பட்டது என்றும், அந்த 3,419 என்ற எண்ணிக்கையில் நுகரப்பட்ட யூனிட்டுகளுக்குப் பதிலாக ஊழியர் ஒருவர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால் இந்த தொகை வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரின் மின் நுகர்வுக்கான சரியான தொகை ரூ.1,300 என்றும் அது குறித்த விவரம் அவருக்கு அனுப்பப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமாக மின்சார துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் மின்சாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘என்னங்க இப்படி பண்ணி இருக்கீங்க’:Chess Olympiad ஏற்பாடுகள் குறித்து Spain Grand Master ட்விட்டர் பதிவு !