India

ரூ.33 லட்சம் சம்பளம்.. இந்திய மாணவருக்கு ஆசை காட்டி மோசம் செய்த அமெரிக்க நிறுவனம். நடந்தது என்ன?

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனம் ஒன்று இணையதள வடிவமைப்பு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த வேதாந்த் தியோகேட் என்ற மாணவரும்இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். போட்டியில் 2,066 வரிகளை கொண்ட கோடிங்கை 2 நாட்களில் முடித்து இந்த போட்டியில் முதலாவதாக வந்து வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்த நிலையில், அவரின் திறமையை பாராட்டி ஆண்டுக்கு ரூ.33 லட்சம் மாத ஊதியத்தில் வேலை வழங்க அமெரிக்க நிறுவனம் ஒன்று முன்வந்தது.

பின் அவர் குறித்து விசாரித்தபோது வேதாந்த் தியோகேட்க்கு 15 வயது மட்டுமே ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. வேலை செய்ய 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பதால் வேலை வழங்கிய நிறுவனம் அவருக்கு பணி வாய்ப்பை வழங்க மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

ஆனாலும் "உங்களுடைய அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறையை கண்டு நாங்கள் வியந்துள்ளோம்." என்று அந்த மாணவருக்கு வாழ்த்து செய்தி ஒன்றும் அனுப்பியுள்ளது.

இது குறித்து மாணவரின் பெற்றோர் கூறும்போது, "பெரும்பாலான நேரங்களில் லேப்டாபில் சுயமாக பயிற்சி செய்து மென்பொருளை எனது மகன் கற்றுள்ளார். அதுதான் அவரை அமெரிக்க வேலை கிடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதனால் எங்கள் மகனுக்கு ஒரு புதிய லேப்டாப் ஒன்று வாங்கித்தர போகிறோம் "என்று கூறியுள்ளனர்.

Also Read: கெஜ்ரிவாலின் பேனரை கிழித்து மோடியின் பேனரை மாட்டிய டெல்லி போலிஸ்.. அரசு நிகழ்ச்சியில் நடந்த வன்முறை!