India

கோழிக்கறி சாப்பிட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் ? - நடந்தது என்ன ?

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்தவர் தீராஜ். 20 வயது இளைஞரான இவர், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். கல்லூரி விடுதியில் தங்காமல், சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தனது நண்பா்களுடன் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வழக்கபோல், தீரஜ் மதிய உணவை கல்லூரி உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். மேலும் அன்று கோழிகறி குழம்பு என்பதால் விரும்பி உண்டுள்ளார். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி வந்துள்ளது.

அதிக நேரம் வாந்தி எடுத்ததால் தீரஜின் நண்பர்கள், அவரை விடுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு ஓய்வு எடுத்தும் பயனில்லை என்பதால், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு கூட்டி செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, வாந்தி எடுத்ததோடு, மூச்சு விட முடியாமல் அவதிபட்ட மாணவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தீரஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, தீரஜின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து காவல் அதிகாரி கூறும்போது, தீரஜின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது உடற்கூறாய்வு முடிந்த பிறகே தெரிய வரும் என்றார். கோழிக்கறி சாப்பிட்ட பிறகு கல்லூரி மாணவர் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குடும்ப தகராறு : அம்மா அப்பா சண்டையில் பரிதாபமாக பலியான மகள் - டெல்லியில் நடந்த சோகம் !