India

எதிர்க்கட்சிக்கான இடம் குறைந்துகொண்டே வருவது நாட்டுக்கு நல்லதல்ல" - தலைமை நீதிபதி அதிருப்தி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவின் பேச்சு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கூட்டத்தில் பேசிய அவர், "முன்னர் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அந்த மரியாதை குறைந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டின் சட்டம் இயற்றும் அவைகளின் செயல்பாட்டின் தரம் கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளன.

விரிவான விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான இடம் குறைந்து, ஆரோக்கியமான விவாதம் இல்லாமல் ஆகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டமன்றம் கூடும் குறைந்தபட்ச நாட்களின் எண்ணிக்கையை அரசியலமைப்பு குறிப்பிடவில்லை என்றாலும், நீண்ட நாட்கள் சட்டமன்றம் கூடினால் குடிமக்கள் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனது ஒரே கவலை, சட்டத்தை இயற்றுவதில் உள்ள குறைபாடுகளால் நீதித்துறை மீது சுமத்தப்பட்ட சுமை. மசோதாக்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டால், நமக்கு சிறந்த சட்டங்கள் கிடைக்கும்.இளைஞர்கள் ஜனநாயகத்தின் அடிப்படை. இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள். எனவே, இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வும் அறிவும் பெற்று ஜனநாயக அமைப்பில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Also Read: போக்குவரத்து நெரிசலில் ஆரன் ஒலித்தால் என்ன நேரிடும்?-நூதன முறையில் விழுப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறை!