India

நாளை மறுநாள் முதல் GST வரி விதிப்பால் விலை உயரும் பொருட்கள் என்னென்ன?

47-வது GST கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வு வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

விலை உயரும் பொருட்கள் என்னென்ன?

LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது

அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5%-ல் இருந்து ஒரேடியாக 18% ஆக உயர்த்தியும், சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1000-க்கும் குறைவான விடுதி அறை வாடகைக்கு 12% ஆக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேவைகளுக்கான வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அஞ்சல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி இனி வசூலிக்கப்படவுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக விவசாய பயன்பாட்டிற்கான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரிசி மீது 5% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து இந்த போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்பட சில மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கனமழையால் ரயில் ரத்து.. மாணவருக்கு TAXI புக் செய்த அதிகாரிகள்.. இப்படியெல்லாம் செய்யுமா இந்திய ரயில்வே?