India

அசாமை புரட்டி போடும் ஜப்பானிய மூளை காய்ச்சல்..160 பேர் பாதிப்பு,23 பேர் பலி! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளம், மின்னல் போன்றவற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் 170 வதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அங்கு, வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூளை காய்ச்சல் நோயால் இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அசாமில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெள்ளம் பாதித்த மோரிகாவன் மற்றும் நல்பாரி ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாம் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 160 பேருக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாமில் 4 ஆண்டுகளில் ஜப்பானிய மூளை காய்ச்சல் மற்றும் கடுமையான மூளை காய்ச்சல் பாதிப்புக்கு 1,069 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸை முற்றிலுமாக அழிக்க மருந்துகள் இல்லை. நோயாளிகள் முதற்கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த நோய் பாதித்தவர்களுக்கு பின்னாட்களில் பக்கவாதம், வலிப்பு, மனஅழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Also Read: கனமழையால் ரயில் ரத்து.. மாணவருக்கு TAXI புக் செய்த அதிகாரிகள்.. இப்படியெல்லாம் செய்யுமா இந்திய ரயில்வே?