India

“ஆளும் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பு பதவி அது”: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை விமர்சித்த மேதா பட்கர்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.

பா.ஜ.க அறிவித்துள்ள வேட்பாளரான திரௌபதி முர்மு 2 முறை எம்.எல்.ஏவாகவும், 1 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் ஜார்க்காண்டு மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இவரின் சொந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி கூட வரவில்லை என தகவல் வெளியானது.

அரசியலில் இத்தனை பதவிகளை வகித்த திரௌபதி முர்மு அவர்களால் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி கூட ஏற்படுத்த முடியவில்லையா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பான இணையத்தில் விவாதங்களும் ஏற்பட்டது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் மாதர் சங்கத்தின் தேசிய துணை தலைவருமான வாசுகி ட்விட்டரில் ஏற்கனவே கவுன்சிலர், எம்.எல்.ஏ, அமைச்சர், ஆளுநர், தற்போது பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் திரௌபதி முர்முவை சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கரும் விமர்சித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "பல வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆதிவாசி வாக்கு வங்கி அதிகம் இருக்கிறது என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும். அதனால்தான், அவர்கள் திரௌபதி முர்மு போன்ற பழங்குடி நபரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். வன உரிமைகளை வழங்காமல், காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடுபவர்களை ஆதிவாசிகளுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லிவிட முடியாது..

ஆதிவாதிகள் மற்றும் தலித்துக்களின் நலன்களை பாதுகாக்க, குடியரசு தலைவருக்கும் மட்டுமல்ல, கவர்னருக்கும் அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினரின் எதிரான எந்த சட்டத்தையும் அவர் பயன்படுத்துவதை தடுக்க முடியும். ஆனால் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரால் முடிந்ததை உடனே செய்துவிட முடியுமா? குடியரசு தலைவர் ஆளும் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பாக மாறுகிறார் என்றே இதன் அர்த்தம். சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத திரௌபதி முர்முவுக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்று தெரியவில்லை?" எனக் கூறியுள்ளார்.

Also Read: தவறுதலாக ACCOUNT-ல் விழுந்த ரூ.7 லட்சம்.. லாட்டரி பணம் என்று போலிஸை ஏமாற்ற முயன்ற நபர்.. பின்னணி என்ன?