India

ஆப்கானை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மகாராஷ்டிராவில் சுட்டுக் கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல் - பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் குவாஜா சையத் சிஷ்டி (35). இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே வசித்து வந்தார். இஸ்லாமிய மத தலைவரான அவர், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்துக்களை கூறி வந்தார். இதன் காரணமாக இவர், 'சுபிபாபா' என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நாசிக் அருகே காரில் சென்றுகொண்டிருந்த இவரை அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நெற்றியில் குண்டு பாய்ந்து குவாஜா சையத் சிஷ்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அந்த கும்பல் இவரின் காரை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளது. சம்பவம் அறிந்த போலிஸார் விரைந்து வந்து சையத் சிஷ்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர். “இந்த கொலையில் நாங்கள் ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். கொலையின் முதன்மையான நோக்கம் பணம் மற்றும் சொத்து பிரச்சனைகள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் நாங்கள் எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

குவாஜா சையத் சிஷ்டி சர்ச்சைக்குரிய விஷயங்களில் எதுவும் சிக்கவில்லை. இதனால் மதம்சார்ந்து கொலை நடக்க வாய்ப்பில்லை என போலிஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: 3 வருடமா ஒரு மாணவர் கூட வரவில்லை.. விரக்தியில் சம்பளதொகை 24 லட்சத்தை திரும்ப கொடுத்த பேராசிரியர்!