India

காணாமல் போன மகன்.. 17 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காததால் தந்தையின் விபரீத முடிவு!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மினி. இந்த தம்பதிகளின் மகன் ராகுல். இச்சிறுவன் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுவன் ராகுல் திடீரென காணாமல் போனார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் ராகுலைப் பல இடங்களில் தேடி பார்த்தும் மகன் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். ஆனால் சிறுவன் காணாமல் போன வழக்கில் போலிஸாருக்கு ஒரு துப்புகூட கிடைக்கவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் சிறுவன் பற்றி எந்த தகவலும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை.

பிறகு சிறுவன் காணாமல் போன வழக்கு சி.பி.ஐ-க்கு சென்றது. இவர்களாலும் ராகுல் பற்றிய எந்த விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கேரளா முழுவதும் சுற்றிய பிறகு அருகே உள்ள மாநிலங்களிலும் சிறுவன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால், சி.பி.ஐ-லும் ராகுலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சிறுவன் உயிரோடு இருக்கிறான அல்லது இறந்து விட்டானா என்பதைக் கூட போலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ராகுலின் வழக்கு கேரளாவில் மர்ம வழக்காக, எல்லோருக்கும் தெரிந்த வழக்காக மாறியது.

இப்போது கிடைத்து விடுவான், அப்போது கிடைத்து விடுவான் என ராகுலின் பெற்றோர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மகன் எப்போதாவது வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் ராகுலின் சிறு வயது புகைப்படத்தை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் ராகுல் பற்றிய சிறு தகவல் கூட யாருக்கும் கிடைக்கவில்லை.

பின்னர் 9 வருடங்கள் கழித்துக் கடந்த 2014ம் ஆண்டு சிறுன் கிடைக்கவில்லை என சி.பி.ஐ கொச்சி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. போலிஸார் வழக்கை முடித்துக் கொண்டாலும், ராகுலின் பெற்றோர் மகன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் மகன் காணாமல் போனதில் இருந்தே அவரது தந்தை ராஜூ மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். மே 18ம் தேதியுடன் சிறுவன் ராகுல் காணாமல் போய் 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சிறுவன் ராகுலின் தந்தை ராஜூ மே 22ம் தேதி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகன் காணாமல் போனதால்தான் ராஜூ தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: 15 திருமணம்.. 2 கொலை.. 8 ஆண்டுகள் தலைமறைவு : கொலையாளியை சிக்க வைத்த சிக்கன் பக்கோடா : சிக்கியது எப்படி?