India

கால் இடறி விழுந்து பலியான புலனாய்வு அதிகாரி: தெலங்கானாவில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தபோது நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (மே 20) பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில்தான் துணை குடியரசுத் தலைவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு பணிகளை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ஆடிட்டோரியத்தின் ஓரத்தில் இருந்தபடி உதவி இயக்குநரான குமார் அம்ரேஷ் மேடையை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் கால் தவறியதால் மேடையில் இருந்து சுமார் 12 அடி கீழே விழுந்ததில் அதிகாரி குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டதும் உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள், காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஆனால் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி ஆடிட்டோரியத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறார்.

அந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேடையில் இருந்து கால் இடறியதில் உயிரிழந்த புலனாய்வுப்பிரிவு அதிகாரி குமார் அமரேஷின் மறைவுக்கு அதிகாரிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குமாருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

Also Read: காதலியுடன் பேசிய நண்பன்.. ஆத்திரத்தில் 12ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்: போலிஸ் ஷாக்!