India

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. “மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்ற தேவையில்லை”: கிராம மக்கள் அசத்தல்!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி வந்ததிலிருந்தே இந்துத்வா அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத ரீதியான தாக்குதலைத் தொடுத்து வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்வா கும்பல் முயற்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை நீக்க வேண்டும் இல்லாவிட்டால், இரட்டை ஒலி பெருக்கிகளைக் கொண்டு ஹனுமன் மந்திரங்களைப் பாடுவோம் என இந்துத்துவா அமைப்புகள் போர்கொடுத்தூக்கி வருகின்றனர்.

இதையடுத்து கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழிப்பாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என மாநில அரசுகள் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை காட்டி ஒருதலைபட்சமாக மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மட்டுமே அகற்றப்படுகிறது என்றும் இது சிறுபான்மை மக்களின் மதத்தில் நேரடியாகத் தொடுக்கப்படும் தாக்குதல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குத் தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ளது தாஸ்லா பிர்வாடி கிராமம். இங்கு 2,500 குடும்பங்கள் உள்ளனர். இதில் 600 இஸ்லாமியக் குடும்பங்கள். இவர்கள் வழிபாட்டிற்கு என்று கிராமத்தில் மசூதிகள் உள்ளன. இந்நிலையில், மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துக் கூட்டம் கூடியுள்ளது.

இதில் கிராமத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கூடாது என பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம் இந்த கிராமம் இந்து - முஸ்லிம் உறவுக்கு உதாரணமாகியுள்ளது.

Also Read: ”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்; மீறினால் கடும் நடவடிக்கை பாயும்” - IAS, IPSகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை