India

“17 வயதில் முதல் கிரைம்.. இரட்டை இலைக்கு பேரம்.. பல கோடி ரூபாய் மோசடி”: யார் இந்த சுகேஷ் - பகீர் பின்னணி?

இந்தியாவில் பல பிரபல நடிகை மற்றும் பெரும் பணக்காரர்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். தன்னுடைய 17 வயது முதல் ஆட்டத்தை ஆரம்பித்த சுகேஷ், சென்னை கனரா வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக முதன் முதலில் கைது கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் வெளியானார்.

பின்னர் தனக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகளிடம் தொடர்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இவர் மீது பதியப்பட்டுள்ள 15 க்கும் மேற்பட்ட FIRகளின் அடிப்படையில், 75 கோடிக்கும் அதிகமாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இரட்டை இலை வழக்கில் தொடர்பு :-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரு அணிகளாக பிரிந்திருந்த போது முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு வாங்கி தருவதாக கூறி, டி.டி.வி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது டெல்லி இல்லம் மற்றும் அலுவலகத்தில் இருந்து 11 உயர் ரக கார்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரட்டை இலை வழக்கில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்ட போது, அவர் மீது பதிவாகியிருந்த மேலும் 22 பண மோசடி வழக்குகளால் ஜாமீன் மறுக்கப்பட்டு சுகேஷ் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரட்டை இலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 11 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சுகேஷ் ஜாமீன் மட்டும் தொடர்ந்து நிராகரிக்கபட்டு வந்தது.

மேலும், சிறையில் இருக்கும் போது தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஜெயிலில், செல்போன், சிறப்பு உணவு என சகல வசதிகளுடனும் சுகேஷ் இருந்துள்ளார். சிறைத்துறை ஆய்வின் போது, குற்றவாளிக்கு இவ்வளவு வசதி எப்படி செய்து தர முடியும், எந்த அதிகாரிகள் எல்லாம் பணம் வாங்கினார்கள் என்ற உள் விசாரணையில், திகார் சிறையில் இருந்து மாற்றி ரோஹிணி சிறையிள் அடைத்தனர். ஆனால் ரோஹிணி சிறைக்கு மாற்றப்பட்டார் பின்னரும் சுகேஷின் ஆட்டம் நிற்கவில்லை. அங்கேயும் போலிஸாரை கைக்குள் போட்டுக் கொண்டு அனைத்து வசதிகளையும் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது.

பணக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பு :-

அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், மாதத்திற்கு 65 லட்சம் ரூபாய் வரை சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியிருப்பது டெல்லி காவல்துறையை ஆட்டம் காண செய்தது. சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது, யார் சுகேஷுக்கு உதவுகிறார்கள் என அமலாக்கத்துறை உதவியை நாடியது டெல்லி காவல்துறை. அப்போதுதான் கடந்த 2021ஆம் ஆண்டு பிரபல மருந்து நிறுவனமான Ranbaxy உரிமையாளர்களின் மனைவிகளிடம் ₹215 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

Ranbaxy நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங், மல்விந்தர் சிங் ஆகியோர் ரூ.2000 கோடி பணமோசடி செய்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர உதவுவதாக தன்னை சட்டத்துறை செயலர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு சிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து ₹215 கோடியை சுகேஷ் வாகியதாக அதிதி சிங்கிடம் நடைபெற்ற விசாரணையில் தெரியவந்தது.

பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு :-

சுகெஷின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் அதற்கு உதவியுள்ளார் என அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. தொடர் விசாரணை மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது அமலாக்கத் துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில், சென்னையில் சுகேஷுக்கு சொந்தமான ₹.82 லட்சம் மதிப்புள்ள பங்களா மற்றும் அதற்குள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள உயர் ரக கார்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும் பல்வேறு பாலிவுட் நடிகைகளுடன் சுகேஷுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்ஸை தான் காதலிப்பதாக சுகேஷ் வாக்குமூலம் அளிக்க, அவருக்கு தனக்கும் தொடர்பில்லை என ஜக்குவலினின் தரப்பு விளக்கம் அளித்தது. இந்நிலையில் தான், தன்னுடைய மனைவிக்கு உடல் நலக்குறைவு எனக்கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகேஷ்க்கு ஜாமீனில் வெளியே வந்த போது நடிகை ஜாக்குவலின் பெர்னாண்டஸ் உடன் உல்லாசமாக இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பல லட்சம் மதிப்புள்ள வாட்ச், கார்கள், பெர்சியன் வகை பூனை மற்றும் குதிரைகளை ஜாக்குவலினுக்கு சுகேஷ் வழங்கியதும், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்தது வெளியே வந்தது. பின்னர், பாலிவுட் நடிகையும், டான்சருமான நோரா ஃபதேகியும் இந்த விவாகரத்தில் விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணை ஒருபுறம் இருக்க, டெல்லி காவல்துறை நடத்திய உள் விசாரணையில் சுகேசுக்கு உதவியதாக திகார் மற்றும் ரோஹிணி சிறையைச் சேர்ந்த எஸ்.பி.க்கள், ஜெயில் வார்டன் உள்ளிட்ட 23 சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

அமலாக்கத் துறை பகீர் தகவல்!

இந்த விவகாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த நிலையில், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணைக்காக சுகேஷை அமலாக்கத் துறை அழைத்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், துணை குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தயார் செய்துள்ளது.

அதில் நடிகை ஶ்ரீ தேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூர், சயிப் அலிகான் மகளும் தனுஷின் Atrangi Re பட நாயகியுமான சாரா அலி கான் மற்றும் பிரபல நடிகை பூமி பெட்னேகர் ஆகியோர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, சாரா அலி கானுக்கு விலை உயர்ந்த வாட்ச் மற்றும் சாக்கலேட்டுகளை சுகேஷ் அனுப்பியதாக சாரா வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

நடிகை ஜானவி வாக்குமூலம் :-

நடிகை ஜானவியின் வாக்குமூலத்தில், "சுகேஷின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால், ஶ்ரீ தேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான பெங்களூருவில் உள்ள அவரது சலூன் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார். அதில் பங்கேற்ற போது அவருக்கு விலையுர்ந்த (Christian Dior) பேக்கை அவரது தாய் வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பின்னர் 18 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தனக்கு அந்த பணத்தை அவர்கள் அனுப்பினார்கள் என நினைத்தேன். ஆனால் யார் மூலம் வந்தது என தனக்கு தெரியாது. லீனா மரியா பால் உடன் மட்டுமே பேசியுள்ளேன். நிகழ்ச்சியின் போது அவர்தான் என்னை வரவேற்றார். அப்போது சுகேஷ் யார் என தனக்கு தெரியாது. மோசடி செய்யப்பட்ட பணத்திலிருந்து 18 லட்சத்தை தனக்கு அனுப்பியுள்ளார் என்பது எனக்கு தெரியாது" என ஜான்வி கபூர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நடிகை பூமி பெட்னேகர் தனக்கு அறிமுகம் இல்லாத யாரிடமும் இருந்து பரிசுகள் பெறுவதில்லை எனக்கூறி சுகேஷ மற்றும் மரியா பால் வழங்கிய பரிசுப் பொருட்களை மற்றுத்துவிட்டார் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையின் போது மூவரும் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததாகவும், சுகேஷை இவர்கள் நேரில் சந்தித்ததில்லை எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

Also Read: “இது எங்க ஸ்கூல்..”: சொந்தக்காசில் வகுப்பறைக்கு பெயிண்ட் அடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்: குவியும் பாராட்டு!