India

பழங்குடி பெண்ணின் ஆடைகளைக் கிழித்து செல்போனில் படம் பிடித்த பா.ஜ.க கும்பல்.. உ.பியாக மாறி வரும் கர்நாடகா!

கர்நாடகா மாநிலம், தக்சின கன்னடா மாவட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் பழங்குடி பெண்ணை 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்ணுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா ஆகிய 9 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதில் சென்னா கேசவா பா.ஜ.க பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்தப் பெண் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை அளக்க முற்பட்டுள்ளனர். அப்போது 9 பேரும் சேர்ந்து கொண்டு அதிகாரிகளுடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். பிறகு புகார் கொடுத்த பழங்குடி பெண்ணை அந்த கும்பல் தாக்கி, அரவது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தடுக்க வந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது சகோதரியையும் இந்த கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து போலிஸார் பழங்குடி பெண்ணை தாக்கிய 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக உத்தர பிரதேசத்தை போன்று கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: இந்தியாவில் 10 ஆண்டில் 17 லட்சம் பேருக்கு HIV தொற்று.. எந்தெந்த மாநிலங்களில் எத்தனைப் பேர் பாதிப்பு?