India

‘பகீர்’ ஆன்லைன் மோசடி.. ஒயின் ஆர்டர் செய்த பெண்ணிடம் 4 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம கும்பல் - நடந்தது என்ன?

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டிற்கு அவரது சகோதரி வந்துள்ளார். இதனால் அவருக்கு விருந்து வைப்பதற்காக ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது ஆன்லைனில் தேடியபோது, ‘ஓம் சாய் பீர் ஷாப்’ என ஒரு கடை இருந்துள்ளது. அந்த கடையின் போன் நம்பரை எடுத்து, ஒயின் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர்கள் பணத்தை முன்பே கட்டினால்தான் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண் ஒயினுக்கான பணம் ரூ.650-ஐ கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். உடனே கடை ஊழியர், நீங்கள் கூடுதலாக 30 ரூபாய் அனுப்பியதால் அந்த பணத்தை திருப்பி அனுப்புகிறோம். அதற்கு நீங்கள் நாங்கள் அனுப்பும் QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதை நம்பி அந்தப் பெண்ணும் QR Code-ஐ ஸ்கேன் செய்த அடுத்த கணமே அவரது வங்கிக் கணக்கில் இருந்து 19,991 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்தப்பெண் கடை ஊழியரிடம் கேட்டபோது, தவறுதலாகிவிட்டது.. மீண்டும், QR Code-ஐ ஸ்கேன் செய்தால் பணம் திரும்ப வந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் அதேபோல் செய்தபோது, இந்த முறை அவரது வங்கிக் கணக்கில் இருந்து 96 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்ததடுத்து நடந்ததில் ரூ.4.80 லட்சத்தை இழந்திருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் போலிஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய மாணவன் மனப்பிறழ்வு நோயால் பாதிப்பு - ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!