India

தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்து ரூ.105க்கு பெட்ரோல் விற்பனை.. மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.

இதையடுத்து மார்ச் 22ம் தேதியிலிருந்து மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் ஆறு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்துள்ளது.

இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.18க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.33க்கும் விற்பனையாகி வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் விலை உயர்த்து வருவது வாகன ஓட்டுகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78, டீசல் ரூ.3.90க்கும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை உயர்வுக்குச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக பா.ஜ.க கூறுகிறது.

ஆனால் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது மட்டும் எப்படி பெட்ரோல் விலை உயராமல் இருந்தது என எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: பெட்ரோல் விலை உயர்வுக்கு சர்வதேச கச்சா எண்ணை சந்தையே காரணம்.. வழக்கம்போல் கப்சாவிடும் மோடி அரசு: முரசொலி!