India

“2 துப்பாக்கிகள்... 1.54 கோடிக்கு சொத்து” : உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்புமனுவில் தகவல்!

உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரூ1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் 2 துப்பாக்கிகளும் தம்மிடம் இருப்பதாக யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதுவரை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது இல்லை. தற்போது கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிடுகிறார்.

கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத், இன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் சென்றார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தமது வேட்புமனுவில், ரூ1,50,00,000 மதிப்பிலான சொத்துகள், 6 வங்கி கணக்குகள், ரூ.12,000 மதிப்பிலான சாம்சங் செல்போன், ரூ1,00,000 மதிப்பிலான ரிவால்வர், ரூ80,000 மதிப்பிலான ரைஃபில் ஆகியவை தன்னிடம் உல்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.49,000 மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள், தங்க செயின், ஆபரணங்களைக் கொண்ட ருத்திராட்ச மாலை உள்ளது என ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2020-2021-ல் தமது ஆண்டு வருமானம் 13,20,653 என்றும் 2019-20ல் ரூ.15,68,799; 2018-19-ல் ரூ.18,27,639; 2017-18-ல் ரூ.14,38,670 ஆண்டு வருமானம் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

சாமியாராக இருந்து அரசியல்வாதியான யோகி ஆதித்யநாத் தன்னிடம் 2 துப்பாக்கிகள் உள்ளது எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர் தொகுதியில் முன்பு, மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த யோகி ஆத்யநாத் அதை ராஜினாமா செய்து, 201 ஆம் ஆண்டு உ.பி.யின் முதல்வராக நியமிக்கப்பட்டபோது மேலவையின் உறுப்பினர் ஆனார்.

ஆதித்யநாத முதல்வர் ஆனபோது மேலவையில் அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கில், அவரிடம் 2 வாகனங்கள் இருந்ததாக தெரிவித்தார். அந்த 2 வாகனங்களும் இப்போதைய சொத்து கணக்கில் குறிப்பிடப்படவில்லை. அந்த 2 வாகனங்களையும் அவர் விற்றுவிட்டார் என்றும், அதற்கு பதிலாக அரசு வாகனங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக்கூடாது என்பதுதான் மோடி அரசின் எண்ணமா?” : முதல்வர் ஸ்டாலின் தாக்கு!