India

தொற்று அறிகுறி இருப்பவரிடம் இருந்து 40 முதல் 100 பேருக்கு பரவும் வாய்ப்பு: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO!

உலக நாடுகளில் தொற்றுப் பரவலின் வேகம் சுனாமியைப் போல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது என்று 31.12.2021தேதிய ‘தினகரன்’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

உலக நாடுகளில் டெல்டா, ஒமிக்ரான் என மாறுபட்ட வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால் சுனாமியை போன்று ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பரவல் சற்று குறைந்தது. ஆனால் தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுவதாக பயந்து பலர் செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. மேலும், ஒரு டோஸ் போட்டவர்கள் இரண்டாவது டோஸ் போடாமல் தவிர்த்து விட்டனர். இந்நிலையில், ஒன்றிய அரசு 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி அறிமுகம் செய்துள்ளது.

ஒரு மாதமாக உலக நாடுகளில் ஒமிக்ரான் எனும் மாறுபட்ட வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அடுத்த சில நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று உலக நாடுகளில் ஒமிக்ரான், டெல்டா மாறுபட்ட வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிரமடைந்துள்ள இந்த தொற்று பரவலால் மீண்டும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டு, தனி படுக்கைகள் என்று தயாராகி வருகிறது. இந்நிலையில், சுகாதாரப்பணியாளர்களும் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் கட்டுப்பாடுகளையும், கொரோனா விதிமுறைகளையும் கடைபிடிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். புத்தாண்டில் நோய் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலும் அதன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. இதற்கிடையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மகாராஷ்டிராவில் அதிகமாக பரவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மும்பை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. டெல்லி அரசு இரவு நேர ஊரடங்கு, பஸ், ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதி என்று கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு பன்நோக்கு மருத்துவமனையில் 75 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து 40 முதல் 100 பேர் வரைக்கும் பரவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Also Read: பேரறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மாநிலப் பாடல்!