India

“தேர்தல் ஆணையத்தை கூட்டத்திற்கு அழைப்பதா? - அரசியலமைப்பை மீறிய மோடி அரசு”: ‘குட்டு’ வைத்த தேர்தல் ஆணையர்!

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 15 அன்று, ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சக செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது. அதில், “மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்ததல் அனைத்துக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை உருவாக்குவது குறித்து பிரதமரின் தலைமைச் செயலாளர், டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நவம்பர் 16 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” என்று அரசு செயலாளர் உத்தரவிட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகள் மூலமும் ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த முடியாது. அலுவல் சார்ந்த வசதிகளை மட்டுமே, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செய்து கொடுக்க முடியும்.

ஆனால் அதற்கு மாறாக அவ்வாறிருக்கையில், தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு பிறப்பித்து பிரதமரின் அலுவலகம் கடிதம் எழுதிய விவகாரத்தை ஆங்கில நாளேடு ஒன்று ஏடு வெளிக்கொண்டு வந்துள்ளது.

மேலும் அந்த நாளேட்டில், இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து, இந்திய அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளது. லட்சுமணரேகையை மீறாத வகையில், கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைசாரா விதத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் (informal talks) தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஒன்றிய அரசின் இந்த செயல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவ்வாறிருக்கையில், பிரதமர் அலுவலகம் எவ்வாறு தேர்தல் ஆணையத்தை அழைக்க முடியும்? அப்படியானால், தேர்தல் பாரபட்சமின்றி நடக்கும் என்பதற்கு என்ன உத்தர வாதம் உள்ளது? என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: “மோடி ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !