India

“இளைஞர்களின் சிந்தனையில் சாதி, மதப் பாகுபாடுகளுக்கு இடமில்லை” : தோழியை கரம் பிடித்த தேஜஸ்வி ‘நச்’ பதில் !

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நிறுவனர் லாலு பிரசாத்தின் இளைய மகனும், பீகாரின் இளம் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி கடந்த டிசம்பர் 8 -ஆம் தேதி, தனது பள்ளி வகுப்புத் தோழியான ரேச்சல் கோதினோவை டெல்லியில் காதல் திருமணம் செய்து கொண்டார்.

ரேச்சல் கோதினா கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தேஜஸ்வியின் திருமணம் சாதி மட்டுமன்றி மத மறுப்புத் திருமணம் ஆகவும் அமைந்தது, பலரின் பாராட்டுதல்களுக்கு உள்ளானது. ஆனால், கிறிஸ்தவப் பெண்ணை மணந்ததற்கு, தேஜஸ்வியின் தாய் மாமன் சாது யாதவ் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தேஜஸ்வி தங்களை (யாதவ வகுப்பினரை) அவமானப்படுத்தி விட்டதாக சாது யாதவ் கூறியிருந்தார். இதனிடையே, காதல் மனைவி ரேச்சலுடன் தேஜஸ்வி செவ்வாய் அன்று பாட்னா விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, கிறித்தவப் பெண்ணை மணம் முடித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துள்ள தேஜஸ்வி, ‘‘ராம் மனோகர் லோகியாவின் கொள்கைகளைப் பின்பற்றும் என் போன்ற இளைஞர்களின் புதிய சிந்தனைகளில் சாதி, மதப் பாகுபாடுகளுக்கு இடமே இல்லை’’ என்று பொட்டில் அடித்தாற்போல் கூறியுள்ளார். “எனது தாய்மாமா சாது யாதவ், அதீதக் கற்பனையில் கருத்து கூறியுள்ளார். எனினும், அவர் மீது எனக்கு இன்னும் மதிப்பு இருப்பதால் நான் தனிப்பட்ட முறையில் மாமாவின் மதிப்பு குறையும்படி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: இரு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி.. வெறுப்பு பிரசாரம் செய்த மாரிதாஸ் மீண்டும் கைது!