India

கோர விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி; சோகத்தில் ஆழ்ந்த ஒன்றிய அரசு - தலைவர்கள் இரங்கல்!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

முதலில் 7 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் இடைவிடாமல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் 11 பேரும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. தற்போது முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தும் அவரது மனைவியும் அதிகாரப்பூர்வமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ராணுவ கல்வி பயின்ற வெலிங்டன் பகுதியிலேயே விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி.. யார் இந்த பிபின் ராவத்..?

இதனையடுத்து பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் தொடங்கி நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி, 4 தசாப்தங்களாக தன்னலமற்று நாட்டுக்காக பணியாற்றிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சற்றும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தைரியமான மகனை இந்தியா இழந்திருக்கிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, முப்படைகளின் தளபதியான பிபின் ராவத்தின் சிறப்பான சேவையை இந்தியாவும் இந்திய மக்களும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என ட்விட்டரில் இரங்கல் பதிவிட்ட பிரதமர் மோடி நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவரின் வாழ்க்கை சிறப்புக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார் வெளியிட்டுள்ளார்.

அதேபோல, பிபின் ராவத்தின் இழப்பு ராணுவத்திற்கும், நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், கோர விபத்தில் நாட்டின் ராணுவ உயரதிகாரியை இழந்தது வேதனை அளிக்கிறது. இது பெரும் வலியை தருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தியும் பிபின் ராவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு நினைத்து பார்க்கவே முடியாத இழப்பு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சரான பசவராஜ் பொம்மையா, ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் பிற ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியும், துரதிருஷ்டமும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.