India

வருகிறது இன்னொரு டோஸ்... பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசுக்கு விஞ்ஞானிகள் பரிந்துரை!

ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து பரிசீலிக்க ஒன்றிய அரசின் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டன. அதன்மூலம் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து முடிவெடுக்கக்கோரி, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளன.

இந்திய மரபணு விஞ்ஞானிகளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புடைய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அளித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

கோவிட் வைரஸின் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க ஒன்றிய அரசு இந்திய சார்ஸ்-கோவ்-2 மரபணு வரிசைமுறை கூட்டமைப்பை (INSACOG) உருவாக்கியது. அந்த கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் பூஸ்டர் டோஸை பரிந்துரை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக INSACOG விஞ்ஞானிகள் கூறுகையில், “தடுப்பூசி போடாமல் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். மேலும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து பரிசீலிக்கலாம்.

தற்போதைய தடுப்பூசிகளில் வைரஸுடன் போராடும் ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் இருக்கும். அவை ஒமைக்ரானின் ஆபத்தை குறைத்தாலும், அவற்றை எதிர்க்க போதுமானதாக இருக்காது. எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸை பரிசீலிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கோவிஷீல்டு தடுப்பூசியின், பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கூறுகையில், “பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து அரசின் திட்டம் என்ன?: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!