India

தவறான அறுவை சிகிச்சையால் பார்வை பறிபோன 15 பேரின் கண்கள் அகற்றம்... பீகாரில் அதிர்ச்சி சம்பவம்!

பீகார் மாநிலம், முசாபர்பூரில் கடந்த மாதம் 22ஆம் தேதி 65 நபர்களுக்குக் கண்புரை அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 27 நபர்களுக்குக் கண் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களில் 15 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட கண்ணை மருத்துவர்கள் அகற்றினர். மேலும் மூன்று நோயாளிகளின் கண்களும் அகற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரணவ் குமார், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் கண்புரை சிகிச்சை செய்து கொண்ட 65 பேரின் உடல் நலம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: 'ஜாவத்' புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?: வானிலை மையம் சொல்வது என்ன?