India

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது : கேரள அரசு அறிவிப்பு!

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை மீண்டும் அச்சப்பட வைத்துள்ளது. தற்போது இந்த புதிய வைரஸ் தென் ஆப்ரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகள் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படாது என கேரள முதல்வர் பினராஸ் விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் கொரோனா பாதித்தால் அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை கிடையாது.

மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாரம் ஒரு முறை ஆர்.டி.பி.சிஆர் சோதனை செய்து அதற்கான முடிவை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இனி டீ கூட குடிக்க முடியாது.. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்திய மோடி அரசு!