India

ஒரே கல்லூரியில் 182 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று... என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

நாடு முழுவதும் தற்போதுதான் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கர்நாடகாவில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தர்வாட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, முதலில் 300 பேரை பரிசோதனையிட்டதில் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வெளிவந்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் எனவும், அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக இந்த மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அங்கு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போதுதான் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கர்நாடகாவில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also Read: புதிதாக கண்டறியப்பட்ட B.1.1529 கொரோனா.. 32 வகைகளில் உருமாறும் : கதிகலங்கி நிற்கும் ஐரோப்பிய நாடுகள்!