India

பா.ஜ.க அரசைக் கண்டித்து 'சிரிப்பு போராட்டம்' நடத்திய மக்கள்... பின்னணி என்ன?

மத்திய பிரதேச மாநிலம், போபால் தலைநகரில் அரவிந்த் நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது பலர் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

இதையடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் அதிகாரிகள் சாலையைச் சீரமைக்கவில்லை.

இந்நிலையில், அரவிந்த் நகர் பகுதி மக்கள் சாலை சீரமைக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, 'சிரிப்பு போராட்டம்' நடத்தினர். போராட்டம் குறித்தான பதாகையைக் கையில் ஏந்தியபடி அவர்கள் சத்தமாக சிரித்துக் கொண்டே தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த உமா சங்கர் திவாரி, "சாலையைச் சீரமைக்க அரசால் முடியவில்லை. இதனால் நாங்கள் சிரிப்பு போராட்டத்தை நடத்துகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. அப்போது போராட்டம் நடத்தினோம். ஆனால் சில பணிகளை மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டனர். தற்போது மீண்டும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய பாடத்தை பா.ஜ.க அரசுக்கு உணர்த்திய உழவர்களின் போராட்டம்”: முரசொலி!