India

ரயில் பயணத்தின்போது செல்ஃபி எடுத்ததால் வந்த வினை... தடுப்புக் கம்பி மோதி ஆற்றில் விழுந்து பலியான இளைஞர்!

ரயில் பயணத்தின்போது கம்பியைப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்த இளைஞர் ஆற்றுப்பாலத்தில் இரும்பு தடுப்புக் கம்பிகளில் மோதி பாலத்தின் கீழ் விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாண்டவபுராவைச் சேர்ந்த அபிஷேக் (19) என்பவர் பெங்களூரில் இருந்து தனது நண்பர்களுடன் தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். நள்ளிரவு இரண்டு மணிக்கு ரயில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்னாவில் காவிரி ஆற்றை கடந்து வந்தபோது தனது நண்பருடன் செல்ஃபி எடுத்துவிட்டு பின் தான் மட்டும் செல்ஃபி எடுக்க ரயில் கதவின் அருகே நின்று செல்பி எடுத்துள்ளார் அபிஷேக்.

அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் அவரது நண்பர்கள் பயந்துகொண்டு வெளியில் சொல்லவில்லை. பின்னர் பெங்களூரு வந்து உப்பார்பேட் காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

போலிஸார் அபிஷேக்கை தேடி வந்த நிலையில் மண்டியா மாவட்ட போலிஸாரிடமிருந்து வந்த தகவலையடுத்து அங்கு சென்று அங்கு கிடைத்த சடலத்தைப் பார்த்தபோது அது அபிஷேக்கின் சடலம் என தெரியவந்தது.

இதையடுத்து அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, அபிஷேக் ரயில் கதவின் அருகே ஒரு கம்பியில் கையை பிடித்து மற்றொரு கையில் செல்போனை பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது காவிரி ஆற்றுப்பாலத்தில் இரும்பு தடுப்புக் கம்பிகளில் மோதி பாலத்தின் கீழ் விழுந்து நீரில் மூழ்கி பலியானது தெரியவந்துள்ளது.

Also Read: “எங்க கல்யாணத்த மழை வெள்ளம் தடுப்பதா..? நெவர்” : காதல் ஜோடி எடுத்த முடிவு - இணையத்தில் வைரல்!