India
பத்மஸ்ரீ விருது விழா மேடையில் வெறும் காலுடன் நின்ற 72 வயது மூதாட்டி... யார் இந்த துளசி கவுடா?
பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற வெறும் காலுடன் வந்து கவனம் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி துளசி கவுடா. இவர் பாரம்பரிய உடையில், செருப்பில்லாமல் வெறும் காலுடன் வந்து விருது பெற்றார்.
துளசி கவுடாவின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து பலரும் துளசி கவுடா குறித்து அறிந்துகொள்ள இணையத்தில் தேடினர்.
கர்நாடக மாநிலம் அங்கோலா அருகே உள்ள ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி கவுடா. ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த துளசி கவுடா சுற்றுச்சூழல் ஆர்வலர். பள்ளிக்கூடத்திற்குச் சென்றிடாத துளசி கவுடா சிறுவயதில் இருந்தே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார்.
12 வயதில் வனத்துறையில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்ட துளசி கவுடா, மரங்கள் நட்டு வளர்த்து வந்துள்ளார். குறைந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வந்த அவரை நிரந்தரப் பணியாளராக நியமித்தது அரசு.
காடுகளில் இருக்கும் அரியவகை தாவரங்களும் மூலிகைகளும் அவற்றின் பலன்களும் துளசி கவுடாவுக்கு அத்துப்படி. காடு தொடர்பான அவரது அறிவின் காரணமாக வன ஆர்வலர்களால் துளசி கவுடா, ‘Encyclopedia of Forest’ என்றே அழைக்கப்படுகிறார்.
தற்போது வரை துளசி கவுடா 30,000-த்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுப் பராமரித்துள்ளார். 72 வயதிலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்தி வரும் துளசி கவுடாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து ஒன்றிய அரசு கௌரவித்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!