India

“டெல்லியில் அபாய கட்டத்தை எட்டிய காற்றின் தரம்” : காற்று மாசுபாட்டை உணராமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்?

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 330 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. 51 மற்றும் 100 ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ‘மோசம்’, 301 மற்றும் 400 ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 ‘கடுமையானது’ எனக் கருதப்படுகிறது.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படும் நிலையில் தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் வெடித்ததாக பலரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பல இடங்களில் காற்றின் தரம் என்பது அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also Read: காற்று மாசுபாட்டில் முதலிடம் : உலகின் மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் - IQAir அதிர்ச்சி தகவல்!