India

“இந்தியர்களின் ஆயுளில் 2 ஆண்டுகள் காலி” - கொரோனாவுக்கு பிறகான ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால், மனிதர்களின் உத்தேச ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாம் எவ்வளவு காலம் உயிர் வாழ்வோம் என குறிப்பிட்ட பகுதி, உணவு முறை சுகாதார வசதிகள் உள்ளிட்ட சூழலைப் பொறுத்து கணக்கிடப்படுவது 'Life Expectancy' எனப்படுகிறது. இது தமிழில் உத்தேச ஆயுட்காலம் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி உத்தேச ஆயுட்காலம் 69.5 வயது ஆகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 72 வயது ஆகவும் இருந்துவந்தது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஐ.ஐ.பி.எஸ் எனப்படும் மக்கட்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த், இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆய்வறிக்கையில், “குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருந்தால், பிறந்த குழந்தையின் சராசரி வாழ்நாள் அடிப்படையில் அதன் ஆயுட்காலம் கணிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை விட 35 - 79 வயதிற்குட்பட்டோர் அதிக அளவில் இறந்துள்ளனர். இதன் காரணமாக பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆண்களின் உத்தேச ஆயுட்காலம் 69.5 ஆண்டுகள் என்ற நிலையில் இருந்து 67.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. பெண்களுக்கு 72 ஆண்டுகளில் இருந்து 69.8 ஆண்டுகளாக சரிவடைந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஐ.பி.எஸ் பேராசிரியர் சூரியகாந்த் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிப்பதில், நாம் கண்ட முன்னேற்றத்தை கொரோனா அழித்துவிட்டது. இந்தியாவில் இப்போது மனித ஆயுட்காலம் 2010-ம் ஆண்டு இருந்தது போல ஆகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.பி.எஸ் இயக்குனர் டாக்டர் கே.எஸ். ஜேம்ஸ் கூறுகையில், “ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த காலங்களில் எச்.ஐ.வியால் ஆயுட்காலம் பாதித்தது. ஆனால் சில ஆண்டுகளில் அது மீண்டு வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இனி கவலை வேண்டாம்... வந்துவிட்டது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி!