India

பெண் குழந்தை பிறந்ததால் 3 நாட்கள் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடிய மாமா: ம.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் சைனானி. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளியான இவரது தங்கை சிகா போர்வாலுக்கு கடந்த 9ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை கொண்டாடும் விதமாக தீபக் சைனானி தனது பெட்ரோல் பங்கிற்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கியுள்ளார். மேலும் இது குறித்து பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்திருந்தார்.

இதில்,"தனது தங்கைக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதால் அக்டோபர் 13,14,15 ஆகிய மூன்று நாட்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

அதாவது, ரூ.100க்கு பெட்ரோல் போட்டால் 5 விழுக்காடும், ரூ. 200லிருந்து 500 வரை பெட்ரோல் போட்டால் 10 விழுக்காடும் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அந்த அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டி விற்பனையாகும் நிலையில் தீபக் சைனானி இந்த அறிவிப்பைப் பார்த்து வாகன ஓட்டிகள்.பெட்ரோல் பங்கில் மூன்று நாட்கள் மகிழச்சியாக தங்களது வாகனத்தில் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர்.

இது குறித்து தீபக் சைனானி கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் பெட்ரோல் பங்க் தொடங்கினேன். அப்போது இருந்தே எனது பகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில்தான் தனது தங்கைக்கு நவராத்திரி தினத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதைக் கொண்டாடும் விதமாகவும், மக்களுக்கு உதவி செய்யும் விதமாகவும் இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவு செய்தேன். முதலில் இந்த முடிவை எடுக்கக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.

காரணம், பெட்ரோல் பங்கின் விளம்பரத்திற்காக இப்படிச் செய்கிறாரா என மக்கள் நினைத்து விடுவார்களோ என்ற தயக்கம் முதலில் இருந்தது. பின்னர் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் என முடிவு செய்து இலவசமாக பெட்ரோல் வழங்கினேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய பானி பூரி வியாபாரி... ம.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்!