India

விவசாயிகள் மீது மீண்டும் காரை மோதி தாக்குதல் நடத்திய பா.ஜ.க MP.. உ.பியை தொடர்ந்து ஹரியானாவிலும் அராஜகம்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதன் தாக்கம் குறைவதற்குள் ஹரியானாவில் பா.ஜ.க எம்.பி ஒருவர் விவசாயிகள் மீது மீண்டும் காரை மோதியுள்ளார்.

ஹரியானா மாவட்டம் அம்பாலா மாவட்டம் நாராயண்கர் என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அம்பாலா தொகுதி பா.ஜ.க எம்.பி நயாப் சைனி கார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோதியுள்ளது.

பா.ஜ.க எம்.பி-யின் கார் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் மீண்டும் பா.ஜ.கவினர் இத்தகைய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பிரியாணி சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே மாமூல் கேட்டு மிரட்டல்” : கத்தியை காட்டி சவால் விட்ட ரவுடி கைது!