India

கணக்கில் ஏறிய ரூ.52 கோடி.. “கொஞ்சத்தையாவது விட்டு வைங்க” என கெஞ்சும் விவசாயி - என்ன நடக்கிறது பீகாரில்?

பீகார் மாநிலத்தில், வங்கிகளின் தவறுகளால் கடந்த சில நாட்களாக சாமானிய மக்களின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் பீகாரின் ககாரியா பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி தருமாறு கோரினர்.

ஆனால் அவர், பிரதமர் தருவதாக கூறிய ரூ. 15 லட்சத்தின் முதல் தவணை தொகைதான் எனக் கருதி அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகவும், திருப்பித் தர முடியாது எனவும் கூறி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதேபோல பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பீகாரின் முசார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷாவின் வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குறுஞ்செய்தியைப் பெற்ற அவர் நம்பாமல், தனது ஆதார் அட்டையை எடுத்துகொண்டு வங்கிக்குச் சென்று தனது வங்கி கணக்கை சரி பார்த்துள்ளார். அதில் 52 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது.

எப்படியும் இந்தப் பணத்தை வங்கி மீண்டும் பெற்றுக்கொள்ளும் என அறிந்த அந்த விவசாயி அரசிடம் அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகையில் சிறிதளவையாவது எனக்குத் தாருங்கள். இதனால் எங்கள் குடும்பம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம். அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரில் அடுத்தடுத்து தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட செய்திகள் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - நடந்தது என்ன?