India

“நிதி அமைச்சரை நாங்க நியமிச்சு பெட்ரோல் விலையை குறைச்சு காட்டட்டுமா? : மோடி அரசுக்கு ப.சிதம்பரம் சவால்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ப.சிதம்பரம், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் தொகுதி செட்டிநாட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும், காரைக்குடியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி.

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. வரவு செலவு அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு இவ்வளவு நிதி நெருக்கடியிலும் தன்னுடைய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதே கட்டுப்பாடு, இதே கடமை உணர்வோடு அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கொடநாடு விவகாரம் மறு விசாரணையில் உள்ளது. குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்து சட்டப்படி உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை கேஸ் விலை உயர்ந்துகொண்டேதான் இருக்கும். மத்தியில் ஆட்சி மாறினால்தான் பெட்ரோல், டீசல்,கேஸ் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். நாங்கள் எங்கள் சார்பில் ஒரு நிதியமைச்சரை நியமித்து எப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்று சொல்கிறோம்.

சரியான வெளிநாட்டு கொள்கையை வகுத்து எடுத்து நடத்துவதற்கான சரியான நபர்கள் டெல்லியில் இல்லை.

பொதுச் சொத்துக்களை மொத்த விலைக்கு விற்கின்றனர். பொதுத்துறைகளுக்கு மூடுவிழா நடத்துவது வேதனையானது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெறும். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எல்.முருகனும் இந்தப் பெயரைப் பெற்றுவிடக்கூடாது” : ப.சிதம்பரம் சாடல்!