அரசியல்

“எல்.முருகனும் இந்தப் பெயரைப் பெற்றுவிடக்கூடாது” : ப.சிதம்பரம் சாடல்!

“பா.ஜ.க அமைச்சர்கள் சொல்லிக்கொடுப்பதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் என்ற பெயரைப் புதிய அமைச்சர் எல்.முருகன் பெற்றுவிடக் கூடாது” என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

“எல்.முருகனும் இந்தப் பெயரைப் பெற்றுவிடக்கூடாது” : ப.சிதம்பரம் சாடல்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சுதந்திர தினத்தையொட்டி சென்னை விவேகானந்தர் இல்லத்தில் புகைப்பட கண்காட்சி மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ‘தமிழகத்தில் எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்ற, விபரத்தை கேட்டார். தமிழகத்தில் தினமும், எட்டு லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கான நிர்வாக கட்டமைப்பு உள்ளது. ஆனால், இன்று, இரண்டு - மூன்று லட்சம் அளவிற்கு தான் போடப்படுகிறது.

ஒன்றிய அரசால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளில், 75 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்குகிறது. மீதி 25 சதவீதம், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், தனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் தான் கொள்முதல் செய்கின்றன. எனவே, 15 சதவீத தடுப்பூசிகள் தேங்கிக் கிடக்கும் சூழல் இருக்கிறது. தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசியை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகித்தால், கூடுதலாக தடுப்பூசி செலுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “ஒன்றிய அரசு பாகுபாடு பார்க்காமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது” எனப் பேசினார்.

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாட்டுக்குப் போதுமான தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறுகிறார்.

நாளொன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் கட்டமைப்பு இருக்கிறது, ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடின் காரணத்தால் 2-3 லட்சம் தடுப்பூசிகள் தான் போடமுடிகிறது என்று மாநில அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார்.

பசித்தவனுக்குத் தான் தனக்கு எவ்வளவு உணவு தேவை என்று தெரியும், பரிமாறுபவருக்கு எப்படித் தெரியும்?

பா.ஜ.க அமைச்சர்கள் சொல்லிக்கொடுப்பதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் என்ற பெயரைப் புதிய அமைச்சர் எல்.முருகன் பெற்றுவிடக் கூடாது.” எனச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories