India

வழக்குகளை பதிவு செய்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதா? - CBI-ஐ கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

சி.பி.ஐ எத்தனை வழக்குகளை முழுமையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளது என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அது குறித்த விரிவான பட்டியலை ஆறு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய படை வீரர்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஜோடிக்கப்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றம் சிலரை விடுவித்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று இறந்துவிட்டதாகவும் சி.பி.ஐ கூறியிருந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ ஓராண்டு தாமதமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் காலதாமதத்தைக் கண்டித்து சி.பி.ஐ விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதற்கு உரிய பதிலளிக்காததால் மீண்டும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உத்தரவிட்டதைத்ப்தொடர்ந்து சி.பி.ஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா மேல்முறையீடு தாமதமானதற்கு மன்னிப்பு கோரி கடந்த மார்ச் மாதம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐயின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பான சி.பி.ஐ. வழக்குகளை மட்டும் பதிவு செய்துவிட்டு, பின்னர் அதனை கண்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

பின்னர், தற்போது கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கேள்வி எழுப்பி அவற்றின் முழு பட்டியலை ஆறு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Also Read: “மோடி அரசின் ‘குஜராத் மாடல்’ எதையும் உருவாக்காது; அழிக்கும் அல்லது விற்கும்” : முரசொலி சரமாரி தாக்கு !