India
ஒன்றிய அமைச்சரைக் கைது செய்த மகாராஷ்டிர போலிஸ் : பா.ஜ.க.,வுக்கு நாடும் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு ?
பா.ஜ.கவினர் ’மக்கள் ஆசி யாத்திரை’ என்கிற பெயரில் நாடு முழுவதும் கொரோனா காலத்திலும் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே, "நாடு சுதந்திரமடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கூட மகாராஷ்டிர முதல்வருக்குத் தெரியவில்லை. தனது உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். நான் மட்டும், அப்போது அங்கு இருந்திருந்தால் அவரை ஓங்கி அறைந்திருப்பேன்" எனப் பேசியுள்ளார்.
இவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே வீட்டின் முன்பு சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, அவரது உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர். இதனால் மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க அலுவலகங்களுக்குப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவசேனா நிர்வாகிகள் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாசிக் போலிஸார் ஒன்றிய அமைச்சர் மீது மூன்று பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே தன் மீதான கைது நடவடிக்கைக்குத் தடை கோரியும், அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னர், மகாராஷ்டிர போலிஸார் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாசிக் போலிஸ் அதிகாரி தீபக் பாண்டே கூறுகையில், "ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த கட்டநடவடிக்கை இருக்கும்.
நாராயண் ரானே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவரது கைது நடவடிக்கை குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்குத் தெரிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய ஒன்றிய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால், போலிஸாரின் இந்த நடவடிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!