India

"தேர்வு முடிவுகளை வெளியிடுக".. மும்பை பல்கலைக்கழகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் பி.காம் மற்றும் பி.எஸ்.சி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை பல்கலைக்கழகத்திற்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில், 'இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை என்றால், வெடிகுண்டு வைத்து பல்கலைக்கழகம் இடித்து தகர்த்துவோம்' என வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மதிப்பீடு இயக்குநர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐபி முகரியைக் கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் யாராவது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்களாக என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இம்மாதத்தில் மட்டும் மும்பை போலிஸாருக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான புகார்கள் அதிகம் வந்துள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி அமெரிக்கத் துணை தூதரகத்துக்கும், ஆகஸ்ட் 7ம் தேதி நடிகர் அமிதாப்பச்சன் வீட்டின் அருகே உள்ள சத்ரபதி சிவாஜி நிலையத்திற்கும், தாதர் ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மூன்று பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: “2 ஆண்டுகளாக ரயிலை இயக்கிய போலி ஓட்டுநர்கள்” : போலிஸார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!