India
முதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா?
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க மேலிட உத்தரவை அடுத்து எடியூரப்பா பதவி விலகியதால் கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எடியூரப்பா அறிவித்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை மேடைக்கு வந்து எடியூரப்பாவிடம் ஆசி பெற்றார்.
பின்னர் பசவராஜ் பொம்மை ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக்கொண்டார்.
61 வயதாகும் பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் ஆவார். பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை 1988 - 1989இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர்.
ஜனதா தள கட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை, 2008ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருந்துவரும் பசவராஜ் பொம்மை இன்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை; அணை கட்டியே தீருவோம் என்று பேசியவர் பசவராஜ் பொம்மை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்கும் நிலையில், புதிதாகப் பதவியேற்றிருக்கும் கர்நாடக முதலமைச்சரின் நிலைப்பாடு தமிழ்நாட்டு மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!